திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டப்பேரவைத் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “சாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் அதைப் பற்றிப் பெருமையாக பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. அந்த சாதியை - மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாம் என்ன உதவிகள் செய்தோம், எத்தகைய உரிமைகளை பெற்றுத் தந்தோம், அவர்களது உயர்வுக்காக என்ன பணிகளை ஆற்றினோம் என்பதுதான் முக்கியமானது.
அந்த வரிசையில் அனைத்து சாதியினர், மதத்தினர் உள்ளடக்கிய தமிழ்ச்சமூகத்தின் உயர்வுக்கும் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. அதனுடைய ஆட்சி என்பது அனைத்துத் தமிழர்களது மேன்மைக்கான ஆட்சியாகவே அமைந்தும் வருகிறது.
ஆனால் இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சியை அதிமுக ஆட்சி என்று கூடச் சொல்ல முடியாது. இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மத்திய பாஜக அரசு மூலமாக எந்த நன்மையையும் செய்ய வைக்கவும் முடியவில்லை. மதுரையில் அமையும் என்று சொல்லப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வர வைக்க முடியாதா?
2015-ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு செய்தது. நான்கு ஆண்டுகள் கழித்து 2019 ஜனவரி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி மதுரை வந்தபோது இதற்கான அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிக்கல் நாட்டிய இடத்தில் அதற்குரிய தடம் கூட இல்லை.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அவருக்கு டிசம்பர் மாதம் பணி தொடங்கும் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். எந்த டிசம்பர் மாதம் என்று தெரியவில்லை. இதற்கு நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை தெரியவில்லை. நிதி ஒதுக்காத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களை மட்டும் நியமித்துவிட்டார்கள்.
மதுரை வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போலவும், மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போலவும், இத்தாலியின் ரோம் நகரைப் போலவும் மாற்றுவேன் என்றும் செல்லூர் ராஜு சொன்னார். வைகை ஆற்று நீரை தெர்மகோல் கொண்டு மூடியது முதல் - நமக்கெல்லாம் கரோனா வராது என்று கதை விட்டது வரை, முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜு.
விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார்.
கிராமங்கள் அனைத்துக்கும், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்குவதற்காக மத்திய அரசு 'பாரத் நெட்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' என்ற கண்ணாடி இழை கம்பி வழியாக இணைக்க வேண்டும். இதற்காக சுமார் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டது.
சில நிறுவனங்களுக்கு சாதகமாக, டெண்டர் நிபந்தனைகளில் அமைச்சர் உதயகுமார் மாற்றம் செய்துவிட்டதாக செய்திகள் பரவின. டெண்டரே விடவில்லை, விடாத டெண்டரில் எப்படி முறைகேடு நடந்திருக்க முடியும் என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்னார்கள். ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய வர்த்தக அமைச்சகம் சொல்லி விட்டது. ஒப்பந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததுதான் இந்த ஒப்பந்த ரத்துக்குக் காரணம் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
பணம் கொழிக்கும் டெண்டர்களுக்கு மும்முரமாக வேலைகள் நடக்கின்றன. கமிஷன் கிடைக்கும் திட்டங்களுக்கு மட்டுமே பில்கள் பாஸ் பண்ணப்படுகின்றன. பணிமாறுதல்கள் அனைத்தும் லஞ்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இன்னும் சொன்னால் லஞ்சம் வாங்குவதற்காகவே பணிமாறுதல்கள் செய்யப்படுகின்றன.
சமீபத்தில் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு. ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே, துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. துரைக்கண்ணு எந்த தேதியில் மரணம் அடைந்தார் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. அவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று நானே எனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தேன். ஆனால் அதிமுகவினர், துரைக்கண்ணுவின் உடலை வைத்து ஊழல் நாடகம் ஆடி இருக்கிறார்கள்.
அரசாங்கச் சொத்தைக் கொள்ளையடித்து, மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி, கஜானாவைக் காலி செய்து அந்தப் பணங்களை எல்லாம் பல்வேறு இடங்களில் எடப்பாடி கூட்டம் பதுக்கி வைத்துள்ளது என்பது இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.
அப்படியானால் இந்த நாட்டில் மத்திய அரசு என்ன செய்கிறது? வருமானவரித்துறை என்ன செய்கிறது? வருவாய் புலனாய்வுத் துறை என்ன செய்கிறது? உள்துறை என்ன செய்கிறது? அல்லது இந்தப் பணப் பதுக்கலுக்கும் மத்திய அரசுக்கும் மறைமுகத் தொடர்பு இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.
பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அதிமுகவின் பகல் கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக சட்டம் தன் கடமையைச் செய்யும்.
மொத்தத்தில் ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு மாறிவிட்டது. கோட்டையை சில அமைச்சர்கள் கொள்ளையர் கூடமாகவும், சில அமைச்சர்கள் மூடர் கூடமாகவும் மாற்றிவிட்டார்கள்.
இந்தக் கோட்டையை மீட்கும் ஜனநாயகப் போர் தான் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல். தமிழ்நாட்டின் மானம் காக்க அனைவரும் மருதுபாண்டியர்களாக எழுங்கள். கண்ணகியாக எழுங்கள் என்று கேட்டு விடை பெறுகிறேன்”. என்றார்.