ஒரு சட்ட முன்வடிவு, ஒரு மாநில சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றப்பட்டதன் மேல் அல்லது சட்டப்பேரவை மேலவை உள்ள ஒரு மாநிலத்தில் அந்த மாநிலச் சட்டமன்ற ஈரவைகளினாலும் நிறைவேற்றப்பட்டதன் மேல், அது ஆளுநரிடம் முன்னிடப்படுதல் வேண்டும்.
மேலும் ஆளுநர், தாம் அச்சட்ட முன்வடிவுக்கு ஏற்பிசைவு அளிப்பதாகவோ அதற்கு ஏற்பிசைவு அளிக்க மறுப்பதாகவோ அச்சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஓர்வுக்காக நிறுத்திவைப்பதாகவோ விளம்புவோர்.
வரம்புரையாக
ஆளுநர் தம்மிடம் ஏற்பிசைவுக்காக ஒரு சட்டமுன்வடிவு முன்னிடப்பட்ட பின்பு, இயன்றளவு விரைவில், அது ஒரு பணச்சட்ட முன்வடிவமாக இல்லாதிருப்பின், அச்சட்ட முன்வடிவையோ அதில் குறித்துரைக்கப்பட்ட வகையங்கள் எவற்றையுமோ அந்த அவை அல்லது அவைகள் மறு ஆய்வு செய்யுமாறும், குறிப்பாக, தாம் பரிந்துரைக்கும் திருத்தங்கள் எவற்றையும் அறிமுகப்படுத்துவது விரும்ப தகுந்ததா என்பதைப் பற்றி கருதுமாறும் கேட்டுக்கொள்கின்ற செய்தியுறையுடன் அச்சட்ட முன்வடிவை அந்த அவைக்கு அல்லது அவைகளுக்கு திருப்பி அனுப்பலாம்.
அவ்வாறு ஒரு அச்சட்ட முன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டிருக்கும்போது, அந்த அவை அல்லது அவைகள் அதன்படியே அச்சட்ட முன்வடிவை மறுஆய்வு செய்தல் வேண்டும்.
மேலும் அந்த அவையினால் அல்லது அவைகளினால் அச்சட்ட முன்வடிவு திருத்தத்துடனோ, திருத்தமின்றியோ மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு ஏற்பிசைவளிக்க மறுத்தல் ஆகாது.