சென்னை: “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ், “இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான வாய்ப்புகள், பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன. கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது. மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து அறிந்துகொள்ள துறைச்சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் உயர் கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படும். கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நடைபெறும். வரக்கூடிய காலங்களில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மருத்துவப்படிப்புகள்: இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், “மருத்துவப் படிப்பில் மருத்துவம் எம்பிபிஎஸ், பல் மருத்துவம் பிடிஎஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளும், மருந்தாக்கியல், செவிலியர் படிப்பு, இயன்முறை துறை, தொழில் வழி சிகிச்சை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.