சென்னை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் 17 அம்ச வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக உச்சநீதிமன்ற உத்திரவிற்கிணங்க, அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். அதேபோல பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் மாலை 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என 2 மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89 இன் படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.
அதேபோல எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிகக் கூடாது. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக் கூடாது. குடிசைகள், ஓலைக் கூரைகள் உள்ள இடங்களில் வான வெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக் கூடாது.
பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தியை உபயோகித்து ஆபத்துக்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது.