தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிகள்.. சென்னைவாசிகள் கவனிக்க வேண்டியது என்ன? - chennai news

Chennai Chepauk MA Chidambaram Stadium: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

what-are-the-arrangements-for-india-vs-australia-match-in-chennai-chepauk-ma-chidambaram-stadium
சர்வதேச தரத்தில் தயாராகும் சேப்பாக்கம் மைதானம்...போட்டி நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 2:16 PM IST

சென்னை:13வது ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய முன்தினம் (அக்.5) தொடங்கியது. தொடர்ந்து நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, அகமதபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனையடுத்து சர்வதேச தரத்தில் மைதானமானது தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மைதானத்திற்கு, வெளியே உள்ள சுவர்களில் கண்கவர் ஓவியங்களைத் தீட்டும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் களமிறங்கியுள்ளனர்.

2 ஆயிரம் போலீசார்:கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது ஒரு புறம் இருக்க, போட்டி நடைபெறும் நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றாம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:இது குறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விக்டோரியா ஹாஸ்டல் (கெனால் ரோடு) சாலையிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையிலிருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம்.

வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கண்ணகி சிலையில் இருந்து வரும் அரசுப் பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று, தங்கள் இலக்கை அடையலாம். பாரதி சாலை - ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு, பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.

பாரதிசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை. இதேபோல் வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதியிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜா சாலை வரும் அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், உழைப்பாளர் சிலை - காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்குச் செல்லலாம்.

மேலும், போர் நினைவுச்சின்னம் வழியாக வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்குச் செல்லலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தங்களுக்கு செல்லலாம். அனுமதி உள்ள வாகனங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நாட்களில், அதாவது அக்டோபர் 8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான மின்சார ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்?சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கை, மனுதாரர் அதற்கான ஆதாரங்களை வழக்குடன் இணைக்கவில்லை என்பதால், சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. அதேநேரம், உணவுப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட உரிய அமைப்பிடம் முன்வைக்கலாம் எனவும் அனுமதி அளித்துள்ளனர்.

சேப்பாக்கம் மைதனத்தில் நடைபெறும் போட்டிகளின் விபரம்:சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்த முறை இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் உள்பட 5 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

  • இந்தியா – ஆஸ்திரேலியா, அக்டோபர் 8
  • நியூசிலாந்து – வங்கதேசம், அக்டோபர் 14
  • நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 18
  • பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 23
  • பாகிஸ்தான்– தென் ஆப்ரிக்கா, அக்டோபர் 27

உலகக் கோப்பை போட்டி நடக்கும் நிலையில் சோகம்:சேப்பாக்கம் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி முருகன் (52) என்பவர் 14 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேற்பார்வையாளர் பாபுவை கைது செய்து போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர். உலகக் கோப்பை போட்டி சென்னையில் நாளை (அக்-8) நடக்கும் நிலையில், தொழிலாளி முருகன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Asian Games Cricket Final : டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details