சென்னை:இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று. சென்னையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்குச்செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இடநெருக்கடியை சமாளிக்க சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் விளை நிலங்கள், தொழிற்சாலைகள், மக்கள் வசிக்கும் பகுதிகள், நிலத்தை கையகப்படுத்த ஆகும் செலவு என பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்தனர்.
இதையடுத்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவித்தார். பின்னர், இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைய உள்ளதாகத்தெரிவித்துள்ளது.
மேலும், புதிய விமான நிலையம் அமைக்கத் திட்ட மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபாய் உத்தேசப்பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முழு ஆய்வுகளையும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்த பின், மதிப்பு இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமையும் விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமான முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்தும் இடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்புப் பகுதிகள், மேலும், இதர தேவைகள் உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், புதிய விமான நிலையம் சென்னை விமான நிலையத்திலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால் தற்போது உள்ள சென்னை விமான நிலையத்தின் நிலை என்னவாகும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.