கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் 26 ஆயிரம் பேரை மீட்க 146 விமானங்கள் தேவைப்படும் நிலையில், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
மேலும், இந்திய தூதரகத்தில் உள்ள இந்திய சமூக நல நிதியம் மூலமாக வெளிநாடுகளில் பசியாலும் வறுமையாலும் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், தமிழ்நாடு விமான நிலையங்களில் தமிழர்கள் வந்து இறங்காததாலேயே அவர்கள் தமிழ்நாடு திரும்பவில்லை என்று கூற முடியாது என தெரிவித்தார்.
ஏராளமான தமிழர்கள் மற்ற மாநில விமான நிலையங்கள் வழியாக சொந்த ஊர் திரும்பியதாகவும் விளக்கமளித்தார். மேலும், இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 43 விழுக்காடு தமிழர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜூலை மூன்றாம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்கும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25 ஆயிரத்து 939 தமிழர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துவர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இந்திய சமூக நல நிதியம் மூலமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.