கரோனா ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்துகொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டது.
தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்க்கும் எவராலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ஊரடங்கு அறிவித்த நாள் முதல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே சிக்கித்தவித்து வருவதாகக் கூறியுள்ளனர். வேலைவாய்ப்பை இழந்து, உணவு, உறைவிடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடைபயணமாக சொந்த ஊர்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதாகவும், வழியில் பட்டினியிலும், விபத்துகளிலும் உயிரிழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், அவர்களை அரசு அலுவலர்கள் புறக்கணித்து விட்டதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், ”ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்?, மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அவர்களுக்கு என்ன உதவிகள் வழங்கியுள்ளன? குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுகிறார்களா? எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படாவிட்டால் அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றனவா?