சென்னை:நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் பிரான்ஸ் நாட்டில் உள்ளது. இந்த நிறுவனம் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை தயாரித்து வருகிறது. மேலும் பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, திமிங்கலம் வடிவில் சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்னும் "பெலுகா" (A300-608ST) என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995 ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்த சரக்கு விமானத்தில் ஒரே நேரத்தில் 47,000 கிலோ எடையிலான சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இந்த ரக பெரிய சரக்கு விமானம், முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு இன்று (ஜூலை 11) காலை வந்தது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், “ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு இன்று காலை வந்தது. விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக இந்த சரக்கு விமானம் வந்தது.