தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டேட்டிங் ஆப் மூலம் மோசடி: மேற்கு வங்க பெண்ணை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார்! - Serampore Court

கால் சென்டர் அமைத்து டேட்டிங் ஆப் மூலமாக தொழிலதிபர்களை குறி வைத்து கோடிக்கணக்கில் சுருட்டிய வடமாநில ‘மோசடி ராணி’ தலைமையிலான கும்பலை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

டேட்டிங் ஆப் மூலமாக தொழிலதிபர்களை குறி வைத்து மோசடி செய்த கும்பல் கைது
டேட்டிங் ஆப் மூலமாக தொழிலதிபர்களை குறி வைத்து மோசடி

By

Published : Jul 27, 2023, 7:49 AM IST

Updated : Jul 27, 2023, 12:11 PM IST

சென்னை:சைபர் கிரைம்களுக்கு புகழிடமாக இருக்கும் வட மாநிலத்தில் பல கும்பல்கள் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நூதன முறையில் மோசடிகளை அரங்கேற்றி பொதுமக்களிடம் பணத்தை சுரண்டி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக சென்னையைச் சேர்ந்த தங்க வியாபாரி ஒருவரை கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில் பெண் உள்பட மூன்று வட மாநிலத்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

டேட்டிங் ஆப் மூலம் மோசடி:சென்னை பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த தங்க வியாபாரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் டேட்டிங் ஆப் மூலமாக பல பெண்களிடம் பழகி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் mymilap, soulmate என்ற செயலிகள் மூலம் ரூபா என்ற பெண் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். ரூபா தனது காதல் வலையில் விழ வைத்து தங்க வியாபாரியிடம் பழகியுள்ளார். இருவரின் பழக்கத்தினால் அதிக பணம் வைத்திருக்கும் தொழிலதிபர் என்பது ரூபாவிற்கு தெரிய வந்தது.

இதனையடுத்து ஆசையாக பேசி தங்க வியாபாரியிடம் இருக்கும் பணத்தை பெருக்குவதற்காக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். ஆளையே மயக்கும் வகையில் பேச்சு, துணி நாக்கில் ஆங்கிலம், முதலீட்டு அறிவு என தன்னை பெண் தொழிலதிபர் போல் காட்டிக்கொண்டதை நம்பி தங்க வியாபாரி சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார்.

தொழிலதிபர்களை ஆசை வலையில் வீழ்த்தி மோசடி:இவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்தின் மூலமாக கிரிப்டோ கரன்சியில் அதிக அளவு லாபம் சம்பாதிக்கலாம் எனவும், 300 சதவீதம் அளவிற்கு வட்டியாக திரும்ப கிடைக்கும் என நம்ப வைத்துள்ளார். இதனை நம்பி முதற்கட்டமாக 400 ரூபாய் முதலீடு செய்ய ஆரம்பித்த தங்க வியாபாரி படிப்படியாக ரூபாவின் ஆசை வலையில் வீழ்ந்து 1,077 முறை முதலீடு செய்துள்ளார். முதல் தவணை 400 ரூபாய் என ஆரம்பித்த தங்க வியாபாரி 1,000, 2,000 முதல் 5,000, 25,000, 50,000 என படிப்படியாக 10 லட்சம் ரூபாய் அளவு என பல தவணைகளில் கட்டியுள்ளார்.

இவ்வாறு கட்டிய பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலமாக 300 சதவீத வட்டி என்ற அளவிற்கு பல மடங்கில் பணம் திரும்ப கிடைக்கும் என ரூபா கூறியதை நம்பி ஏமாந்துள்ளார். இருப்பினும், இவ்வாறு பணம் கட்டும் பொழுது ஆரம்ப கட்டத்தில் லாபம் வந்ததாக கணக்கு காட்டிய ரூபா ஷா மீது தங்க வியாபாரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

30 லட்சம் ரூபாய் கட்டும்போது கிரிப்டோ கரன்சியில் லாபம் வருகிறதா என கேட்டதற்கு, அதை பயன்படுத்தி தங்க வியாபாரம் சர்வதேச அளவில் முதலீடு செய்யப்பட்டு வருவதாக கூறி தங்க வியாபாரி கொடுத்த பணத்திலேயே இரண்டு லட்சம் ரூபாயை லாபம் என வங்கிக் கணக்கில் ரூபா ஷா போட்டுள்ளார். மேலும், இதுபோன்று தொடர்ந்து முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் வைத்து 500 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது சந்தேகம் வரும் போதெல்லாம் சில லட்சங்களை வங்கி கணக்கில் போட்டு நம்ப வைத்துள்ள ரூபா ஷா பேச்சில் மயங்கி மூன்று கோடியே 61 லட்சம் ரூபாய் பணத்தை கட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் கூறியபடி அதிக அளவு லாப பணம் வராத காரணத்தினால் சந்தேகத்துடன் ரூபா ஷாவை தொடர்பு கொண்டபோது, தங்க வியாபாரியிடம் பேசியதை நிறுத்தியுள்ளார். அதன் பின்பு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி குறித்து புகார் அளித்துள்ளார்.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை:புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். தங்க வியாபாரி பயன்படுத்திய டேட்டிங் ஆப்களை ஆய்வு செய்ததில், மோசடி செய்த ரூபாவை தொழில்நுட்ப ரீதியாக எங்கு இருக்கிறார் எனத் தேட ஆரம்பித்துள்ளனர். பெண் பயன்படுத்திய கணினி, செல்போன், ஐபி முகவரி மற்றும் நெட்வொர்க்குகளை பயன்படுத்தி கொல்கத்தா மேற்கு வங்கத்தில் இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.

சைபர் கிரைம் ஆய்வாளர் வினோத் தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கு வங்கத்திற்குச் சென்று 10 நாட்கள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டதில், பெண் தலைமையில் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஏபிஏ பியூச்சர் சொல்யூஷன் என்ற பெயரில் 100 பேரை வைத்து ரூபா ஷா கால் சென்டர் நடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் தங்க வியாபாரி முதலீடு செய்வதற்காக அனுப்பிய பணத்தின் வங்கிக் கணக்கை கண்டுபிடித்து, அந்த வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை ஏடிஎம் மூலமாக மேற்கு வங்கத்தில் சைபர் கிரைம் கும்பல் எடுக்கும்போது தனிப்படை போலீசார் நோட்டமிட்டு வந்துள்ளனர். தொடர்ந்து பணத்தை எடுக்கும்போது அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகி இருக்கும் நபர்களை தேடிச் செல்லும்போது இந்த கால் சென்டர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கு வங்கம் ஹூக்ளி மற்றும் கோசிப்பூர் பகுதியில் வசித்து வந்த ரூபா ஷா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட விஜய் சோனி, ரமேஷ் சோனி ஆகியோரை கைது செய்துள்ளனர். முக்கியமாக ரூபா ஷாவின் ஆண் நண்பர்கள் இருவரும் அவர்களது பெயரில் வங்கிக் கணக்கை தொடங்கி மோசடி செய்யும் பணம் அதில் விழுந்தவுடன் பிரித்து கொடுக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், அதற்காக 15 ஆயிரம் ரூபாய் கமிஷன்கள் என்ற அடிப்படையில் வேலை பார்த்ததும் தெரிய வந்துள்ளது.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்:இதனை அடுத்து மேற்கு வங்கத்தில் உள்ள சேராம்பூர், பாரக்பூர் ஆகிய நீதிமன்றங்களில் மூன்று பேரையும் ஆஜர்படுத்தி சென்னைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்துள்ளனர். அங்கிருக்கும் பாரா நகர் மற்றும் ரிஸ்ரா நகர் போலீசார் உதவியுடன் சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட மோசடி ராணி ரூபா ஷா, எம்எஸ்சி கணிதம் படித்துவிட்டு, இன்சூரன்ஸ் வரி தொடர்பாக பண பரிவர்த்தனை முதலீடு தொடர்பான கால் சென்டரில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்துள்ளார்.

குறிப்பாக, கால் சென்டரில் வேலை பார்க்கும்போது பலரிடம் செல்போன் மூலமாக பேசும்போதே வங்கிக் கடன் வாங்குவதற்கும், இன்சூரன்ஸ் பணம் செலுத்துவதற்கும் நம்பும்படி பேசினால் உடனடியாக பணம் படைத்தவர்கள் எந்த வித கேள்வியும் இல்லாமல் நம்பி பணம் கட்டுவதை பார்த்த ரூபா ஷா, நூதன முறையில் தானே ஒரு கால் சென்டர் அமைத்து பணத்தை மோசடி செய்ய ஆரம்பித்ததாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதற்கு உதவியாக இந்த நபர்களை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக டேட்டிங் ஆப் மூலமாக பேசும் பொழுது பல பேர் இன்னும் குருட்டுத்தனமாக பெண்களின் ஆசை வலையில் பேசுவதை நம்பி எதையும் செய்கிறார்கள் என்பது ரூபா ஷா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக டேட்டிங் ஆப் மூலம் பேசும்போது ஆண்கள் மயங்குவதையும், அதே நேரத்தில் பரிவர்த்தனை தொடர்பாக கால் சென்டரில் பலரிடம் பேசும் போது எதையும் கேட்காமல் ஆண்கள் முதலீடு செய்யும் விவகாரத்தையும் வைத்து, இரண்டு விதமாகவும் பேசி பலரையும் மோசடி செய்யலாம் என ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார். ஆண்களை குறிப்பாக, தொழிலதிபர்கள் எனில் எவ்வளவு நேரம் பேசுகிறோமோ அவ்வளவு பணம் என்ற அடிப்படையில் பல பெண்களை ரூபா கால் சென்டரில் பயிற்சி கொடுத்து பணியமர்த்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

30 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி:அவ்வாறு பேசி தொழிலதிபர்களை முதலீடு செய்ய வைக்கும் பெண்களுக்கு இன்சென்டிவ்கள் என அதிக சம்பளம் கொடுத்து இன்னும் அதிக பேரை முதலீடு செய்ய வைக்க ரூபா ஷா பல பெண்களை தயார்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இவ்வாறாக இந்தியா முழுவதும் முப்பது கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ராணி ரூபா ஷா தனது கும்பலை வைத்து மோசடி செய்திருப்பது சென்னை தனிப்படை போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு சம்பாதித்த பணத்தை வைத்து மிகப்பெரிய கால் சென்டர் நிறுவனம் நடத்துவதோடு, சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார். கால் சென்டரில் நடந்த சோதனையின்போது மூன்று செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் 20 வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்கள், 20 டெபிட் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டம்: தொடர்ந்து இந்த கும்பலுக்கு தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து முகாமிட்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மிகப்பெரும் மோசடியில் மூளையாக செயல்பட்ட மற்றொரு நபரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியா முழுவதும் மிகவும் நூதன முறையில் மோசடி செய்த மோசடி ராணி கும்பலை முதன் முதலாக கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மோசடி கும்பலிடம் பல ஆண்கள் ஏமாந்து இருக்கலாம் எனவும், அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த கைது செய்தவர்களை காவல் எடுத்து விசாரிக்கவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஆருத்ரா மோசடி: இதுவரை 22 பேர் கைது - பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தகவல்!

Last Updated : Jul 27, 2023, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details