சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ளவர்களும், படித்தவர்களும் வாக்களிக்கவில்லை எனவும், ஆனால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை அரசு செய்து தருகிறது. தமிழ்நாட்டில் இதுவரையிலும் நடைபெறாத அளவில் இந்த உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வாக்குப்பதிவு விகிதம் குறைவாகப் பதிவானதற்குச் சென்னையில் வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் முறைப்படுத்தாமல் இருந்ததும் காரணமாக அமைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் குடியரசு தினவிழா அன்று தொடங்கி வைக்கப்பட்தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளைச் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக 4 நாட்கள் வைத்துள்ளனர். இந்த அலங்கார வாகனங்களின் கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
திமுக தவறு செய்தாலும் நடவடிக்கை
”தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற தேர்தலில் அதிகமாக அசம்பாவிதம் நடந்தது என்று சொல்ல முடியாது, சில இடங்களில் சிறிது அசம்பாவிதம் நடைபெற்றது . அதிமுக ஆட்சியில் நடத்திய தேர்தலில் நடைபெற்ற அசம்பாவிதம் போல தற்போது நடைபெற வில்லை என்றார்.
மேலும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட முயன்றதைத் தடுப்பதற்கு நடைபெற்ற தள்ளுமுள்ளுவில் திமுக வட்டச் செயலாளர் மோதியதால் வாக்குப்பதிவு இயந்திரம் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளது. ஆனாலும் திமுக வட்ட செயலாளர் கூட தவறு செய்திருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.