சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவரது மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதும் 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்பதும் தெரிய வந்ததுள்ளது.
ஆகவே, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென் உயர் நீதிமன்றம் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப். 20) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப் தாக்கல் செய்த அறிக்கையில், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பின், அதில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. வெறும் யூகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தலில் முறைகேடுகள் நடக்கும் என்று மனுதாரர் அச்சம் தெரிவிக்க எந்த காரணங்களும் இல்லை.