சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும், தற்போது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த வாரம் வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில், ஓரிரு இடங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்குத் தீபாவளி அன்று மழை வருமா என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன், “சென்னையில் 10 நாட்களுக்கு மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை சற்று ஓய்வு எடுக்க உள்ளது என்று தான் நாம் கூற முடியும். குறிப்பாகச் சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.
மேலும், இன்று காலை வரை கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய இடங்களில் பரவலாக மழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோல, மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இங்கெல்லாம் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழையானது சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டத்தில் இன்று (நவ.12) வறண்ட வானிலை இருக்கும். இதனால், அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. கடந்த வருடமும் தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மழை இல்லை, தொடர்ந்து இரண்டாவது முறையாக மழையில்லா தீபாவளியாக அமைய இருக்கிறது.