சென்னை:கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 9 மாவட்டங்களில் கனழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: நாளை (ஜன.5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
பின்னர் ஜன.6ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் மூன்று மாதங்களாக திறக்கப்படாத பேரிஜம் ஏரி.. மீண்டும் திறக்க கோரிக்கை!
தொடர்ந்து ஜன.7ஆம் தேதியன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில், லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மழை பதிவான இடங்கள்:கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகி உள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மேலும் அதிகபட்சமாக தேனி மாவட்டம் தேக்கடியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ முதல் 1.செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஜன.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருமண நிகழ்வில் நகைகளைத் திருடிய நபர் கைது.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!