கோடைகாலம் ஏற்கனவே தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், கத்திரி வெயில் காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே வெயிலின் தாக்கம் கடலூர், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகவுள்ளது.
சுட்டெரிக்க வாய்ப்புண்டு
இந்த மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தாலும், கடந்த நாள்களில் சில மாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவினை பெற்றிருக்கின்றன. இதுகுறித்து, கே. ஸ்ரீகாந்த், வானிலை ஆய்வு மைய வல்லுநர் கூறுகையில் "அடுத்த ஒரு வாரத்திற்கு இதே வெப்பநிலை தாக்கம் இருக்கும். ஒரு வாரம் கழித்து சில மாவட்டங்களில் 40 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்க வாய்ப்புண்டு. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசி இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருக்கும்" என கூறினார்.