அரசு மருத்துவமனைகளில் நோயாளியை கவனிக்காத மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதால் 2017 மார்ச் 16ஆம் தேதி பயிற்சி மருத்துவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குமரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
அதேபோல் முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் தங்களது உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, 2017ஆம் ஆண்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கறிஞர் வேலன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் இரண்டு மருத்துவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், அரசு மருத்துவர்களுக்கு காவல் பாதுகாப்பு வழங்க முடியுமா? என்பது குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு ராணுவத்தினர், காவல் துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் இதுபோல வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் என்னாவது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு ஊழியர் போராட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட டெஸ்மா சட்டம் தற்போது அமலில் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், டெஸ்மா சட்டம் என்பது அவசர சட்டமாகத்தான் கொண்டு வரப்பட்டதாகவும், அது அமலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகக் கூறினார்.
தற்போது, மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்பப் பெற்றுள்ளதாகவும், அவர்களுடன் விரைவில் பேச்சுவார்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அரசு மருத்துவர்களுக்கு காவல் பாதுகாப்பு வழங்க முடியுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:மருத்துவர்கள் மீதான பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை நீக்கம் - விஜய பாஸ்கர்