பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை வகித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தி.மு. தனியரசு, கே.பி. சங்கர், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் அவர் பேசியதாவது,"காங்கிரஸ், திமுக ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்தது. ஆனால் பாஜக, அதிமுக ஆட்சியில் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொது மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
அண்டை நாடுகளாக இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. ஆனால், நமது நாட்டில் மட்டும்தான் பெட்ரோல் விலை அதிகமாகவுள்ளது. பொது மக்களின் மீது அக்கறை இல்லாத அரசாக இது இருக்கிறது. ஜிஎஸ்டி வரியால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். நீட் தேர்வால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா இருந்தவரை, நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரவில்லை, மோடியை துணிவோடு அவர் எதிர்த்தார். ஆனால், ஜெயலலிதாவின் பெயரை கூறிக்கொண்டிருக்கும் தற்போதுள்ள அதிமுக அரசு, அமித்ஷா உதவியாளர் வந்தால் கூட அவரது காலை கழுவிவிடுவார்கள். தமிழ்நாட்டின் நிலை மோசமாக உள்ளது.