தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல தோனிகளை உருவாக்க விரும்புகிறோம், சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்படும் - முதலமைச்சர் - தோனி குறித்து ஸ்டாலின் வாழ்த்து

மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காகப் பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து ‘Tamil Nadu Champions Foundation’ என்ற அறக்கட்டளையை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 8, 2023, 11:03 PM IST

சென்னை: சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்து, முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023-க்கான “வீரன்” சின்னம்,
கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட் - ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.


கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'தோனிக்கு தமிழ்நாட்டில் உள்ள எல்லோரையும் போல நானும் ஒரு பெரிய ரசிகன். சமீபத்தில், தோனியின் பேட்டிங்கைப் பார்க்க, இரண்டு முறை சேப்பாக்கம் சென்றேன்.
தமிழ்நாட்டின் வளர்ப்பு மகன் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என நம்புகிறேன். எளிமையான பின்னணியில் இருந்து வந்த தோனி, தனது கடின உழைப்பால் தேசிய அடையாளமாக மாறினார். கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அவர் ஒரு உத்வேகம். அதனால்தான், தூதராக இன்று அவர் இங்கே இருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளிலும் நமது தமிழகத்தில் இருந்து இன்னும் பல தோனிகளை உருவாக்க விரும்புகிறோம்.
விளையாட்டுத் துறையின் வளர்ச்சியானது மிகப்பெரிய பிரமாண்டத்தை இரண்டு ஆண்டு காலத்தில் அடைந்திருக்கிறது. அமைச்சர் உதயநிதி அவர்களது பொறுப்பில் விளையாட்டுத் துறையானது மேலும் மாபெரும் எழுச்சியைப் பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை அமைச்சர் உதயநிதி ஏற்படுத்துவார் என்று உங்களைப்போல் நானும் நம்புகிறேன்.
நாள்தோறும் இந்தத் துறையின் சார்பில் ஏதாவது ஒரு பணி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இது விளையாட்டுத் துறைதானே என்று நினைக்காமல், இந்தத் துறையின் கேப்டனாக இருந்து - அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் நம்முடைய அமைச்சர் உதயநிதி.

தமிழ்நாடு அரசு 44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை அனைவரும் மெச்சத்தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக நடத்தி முடித்துக் காட்டியது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை, விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும் மற்றும் மாநிலத்திற்கும் பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், வாள் சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, பல்வேறு தேசிய சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான உயரிய ஊக்கத் தொகையாக 1,594 பேருக்கு 43 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. விளையாட்டு என்பது தனிமனிதனின் திறமையாக மட்டும் இருப்பது இல்லை, சமூகத்தின் கூட்டு பலத்தைப் பயன்படுத்துவதற்கும், தனிமனித சிறப்பை வளர்த்தெடுப்பதற்கும் ஓர் சிறந்த களம். அதனால்தான் அரசு அதற்கு அதிகப்படியான முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறது. எனவேதான் விளையாட்டு வீரர்களுக்கு திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், உடல்தகுதி, தலைமைத் தகுதி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கித் தருவதைக் கடமையாகக் கருதுகிறோம்.

பள்ளிகள் மற்றும் பொதுச் சமூகம் மூலம் விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து அரசு அவர்களுக்கு உதவி வருகிறது. இதில் முதன்மையானதாக முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பைப் போட்டிகளைச் சொல்லலாம். 'முதலமைச்சர் கோப்பை' என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டை விளையாட்டுப் போட்டிகளில் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் நோக்கத்தோடு இந்த ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கையில் பல மகத்தான அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நீங்களும் அறிவீர்கள். சென்னையில் Squash விளையாட்டுக்கான உலகக்கோப்பைப் போட்டிகள், ஆசிய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப், ATP சென்னை ஓபன் டூர் போன்ற உலகப் போட்டிகளை நடத்துதல் ஆகிய இலக்குகளை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகிறார், நம்முடைய அமைச்சர் உதயநிதி அவர்கள்.

இந்த வரிசையில் மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காகப் பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து ‘Tamil Nadu Champions Foundation’ என்ற அறக்கட்டளையை உருவாக்குவதும் ஒரு முக்கிய அறிவிப்பு. தமிழ்நாட்டில் விளையாட்டுகளுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் மக்களுடனும் பெருநிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது.

நிறுவனங்களும் இதர அமைப்புகளும் அளிக்கும் கூட்டாண்மைச் சமூகப்பொறுப்பு (CSR) நிதிகளை ஒன்றுதிரட்டி இதனைச் செய்யலாம். இதன் மூலமாக நம் மாநிலத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளைச் மேம்படுத்தலாம். விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவு செய்யலாம்.

கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் இது போல தனியார் பங்களிப்பு செயல் திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அதைப் போலவே விளையாட்டுத் துறையிலும் செயல்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை பயன்படும். இங்கே அமைச்சர் உதயநிதி அவர்கள் குறிப்பிட்டதைப்போல, ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்’ தொடங்கியபோது, முதலமைச்சர் என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் நான் 5 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுச் சொன்னார். இங்கேயும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார். உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது. இந்த அமைப்பிற்கும் என்னுடைய தனிப்பட்ட முறையில் 5 இலட்சம் ரூபாயை நான் வழங்குகிறேன் என்பதைத் தெரிவித்து, இந்த அறக்கட்டளை நிதிகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு, குறிப்பிட்ட சிலருக்கு பயன்படுவதாக அமைந்துவிடக் கூடாது.


இந்த அறக்கட்டளை மூலமாக

* அனைத்து விளையாட்டுகளும்

* அனைத்து விளையாட்டு வீரர்களும்

* அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சம அளவில் பயன்பெற வேண்டும்.

மிக நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை, அந்த நோக்கத்தை மிகச் சரியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் துறை மேலும் சிறக்கவும் - ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் - அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளவில் நமது வீரர்கள் பரிசுகளை தொடர்ந்து குவிக்கவும் வேண்டும்' என வாழ்த்தினார்.

இதையும் படிங்க: இரு அணியினரும் இணைந்து செயல்பட முடிவு; ஓபிஎஸ் - டிடிவி தினகரன் கூட்டாகப் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details