சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (செப்.19) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் செப்டம்பர் 15 முதல் 19ஆம் தேதி வரை காணொலி காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் ‘CONNECT 2020’ மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020 (Tamil Nadu Cyber Security Policy 2020), தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020 (Tamil Nadu Blockchain Policy 2020) மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 (Tamil Nadu Safe and Ethical Artificial Intelligence Policy 2020) ஆகியவற்றை வெளியிட்டார்.
பின்னர் Connect-2020 மாநாட்டில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், '' தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2019 உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது கையெழுத்திடப்பட்ட 81 திட்டங்கள் வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மேலும் 191 திட்டங்கள் பல்வேறு கட்டங்களின் கீழ் உள்ளன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஜிஐஎம் 2019ஐ தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின் போது ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டில் 83 ஆயிரத்து 300 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 63 திட்டங்களையும் அரசு ஈர்த்துள்ளது.
கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கூட, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம், இதில் ரூ.31 ஆயிரத்து 464 கோடி முதலீடு ஈர்த்து 69 ஆயிரத்து 712 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டுள்ளோம்.
தமிழ்நாடு அரசு பல்வேறு வணிகச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துகிறது. ‘ஈஸி ஆஃப் டூயிங் பிசினஸ்’, ஆன்லைன் ஒற்றை சாளர அமைப்பு அனுமதி போன்றவற்றில், இது நல்லாட்சிக் குறியீடு, ஏற்றுமதி தயாரிப்பு மற்றும் முதலீட்டு சாத்தியமான குறியீட்டில் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.