சென்னை : ஓ.பி.எஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. தேர்தலுக்கு தயாராவது, கட்சியை வலுப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "திருச்சி மாநாட்டை தமிழகம் மட்டும் அல்ல, இந்தியாவே திரும்பி பார்த்தது. கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளையை விரைந்து விசாரிக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் நடைபெற்றது எழுச்சி மாநாடு அல்ல, அது எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி மாநாடு.
பண மூட்டைகளை மட்டுமே நம்பி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். மதுரை அதிமுக மாநாட்டில் நல்ல உணவை கூட தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமியால் கொடுக்க முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிடுவோமா என கேள்வி எழுப்புகின்றனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாம் போட்டியிடுவோம். தேர்தலில் போட்டியிட்டு நாம் யாரென்று நிரூபிப்போம். அதன் மூலம் அதிமுக நம்மிடம் திரும்பி வரும். இனி வரும் காலம் தேர்தல் காலம். பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அதற்கு முன்பு முதலில் தமிழகம் முழுவதும் மீதமுள்ள நிர்வாகிகளை முழுமையான அளவிற்கு நியமிக்க வேண்டும்.
விரைவில் அமைப்பு ரீதியாக அதவாது, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழகங்கள் என நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். இந்த பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு உறுப்பினர் படிவங்களை வைத்து, 2 கோடிக்கும் மேல் உறுப்பினர்களை சேர்த்து விட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்.
நாம் தான் உண்மையான உறுப்பினர்களை சேர்ப்பதற்காக காத்திருக்கிறோம். வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒருவரை தூது அனுப்பி வாபஸ் பெற வைத்தனர். நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை.
இரட்டை இலையும் நம்மிடம் இல்லை. டிடிவி தினகரனையும் வாபஸ் வாங்க வைத்தார்கள். அப்படியும் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். 1989ஆம் ஆண்டு ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது ஈரோட்டில் உள்ள 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஆனால் கொங்கு பகுதி எங்கள் கோட்டை எனக் கூறுகின்றவர்கள் அதில் தோல்வி அடைந்துள்ளனர்.
செப்டம்பர் 3ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து நமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறோம். அதனையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். தமிழகத்தில் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டம் காஞ்சிபுரம். அறிஞர் அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். அதனால் தான் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளோம். திருச்சியில் நடைபெற்ற மண்டல மாநாட்டு வெற்றியை தொடர்ந்து, மாநிலம் தழுவிய மாநாடு விரைவில் நடத்தப்படும். தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு தயாராகுங்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நீட்டுக்கு அப்போ ஆதரவு.. இப்போ உண்ணாவிரதம்.. திமுக போடும் நாடகம்.." எடப்பாடி பழனிசாமி!