ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக ஆறு மாத பரோல் கோரியும், அந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்த தமிழ்நாடு அரசு, 25 காவலர்கள் வரை நளினியின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றத்தில் விளக்கமளித்தது.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜராக நினைக்கும் ஒருவரை அரசு எவ்வாறு தடுக்கும் என கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு பாதுகாப்பு காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என எவ்வாறு கூற முடியும் என நீதிபதிகள் சாடினர்.
இறுதியில் நளினியை காணொலிக்காட்சி மூலம் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதுகுறித்து அடுத்த வாரத்திற்குள் காணொலிக்காட்சி மூலம் ஆஜராகி வாதிட நளினிக்கு சம்மதமா என்ற தகவல் பெற்றுத்தர சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நளினியின் முடிவை வைத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.