சென்னை: சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த இரண்டு ஆண்டுகளில் அசம்பாவித சம்பவங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் வாழ்க்கை நடத்தி வருவதாக குறிப்பிட்டுப் பேசினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் தமிழ்நாடு காவல்துறை மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு, மதுரை சித்திரைத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் நினைவு நாள், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, திருவாரூர் தேர் திருவிழா என அனைத்து விழாக்களும் எவ்வளவு அமைதியாக சுமூகமாக நடைபெற்றது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்'' எனக் குறிப்பிட்டார்.
மேலும், சாதி மோதல்கள், மதக் கலவரங்கள், போலீஸ் துப்பாக்கிச்சூடு, கள்ளச்சாராய சாவு, ரயில் கொள்ளையர்கள், வட மாநில கொள்ளையர்கள் அட்டகாசம், தொழிற்சாலை போராட்டங்கள் என சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் திராவிட மாடல் ஆட்சியில் முறையாகத் தடுக்கப்பட்டு, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
அதேபோல், பிரதமர் சென்னை வருகை, குடியரசுத் தலைவர் கோவை மற்றும் கன்னியாகுமரி வருகை, ஜனவரி மாதம் முதல் கோவை, திருச்சி, சென்னையில் ஜி20 மாநாடு நடைபெற்றபோது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து மிகப்பெரிய பாராட்டுகளை காவல்துறை பெற்றுள்ளது எனவும்; முதன்முதலில் ஆபரேஷன் ரவுடி வேட்டை நடத்தப்பட்டு 6,132 ரவுடிகள் கைது செய்யப்பட்டு 3047 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.