இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆடத் தெரியாத ஆரணங்கு கூடம் கோணல் என்று புலம்புவது போல், இந்த விடியா திமுக அரசில் வெட்டியாக வலம் வரும் அன்பரசன் என்ற மந்திரி, முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் மீது பாய்ந்திருக்கிறார். வெள்ளத்தில் தவிக்கும் தன் தொகுதி மக்களை காப்பாற்ற வக்கில்லாத, வகையில்லாத, கிடைத்த பதவியை தன் சுகபோக வாழ்விற்காகவே பயன்படுத்தும் இந்த சுயநல மனிதர், நேற்று (நவ.14) எடப்பாடியார் முழங்கால் வெள்ளத்தில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கியதை கண்டு அலறித் துடிக்கிறார்.
தன்னுடைய ஆலந்தூர் தொகுதியில் அனைத்து இடத்திலும் தண்ணீர் வடிந்துவிட்டது என்று தன் தலைமையிடம் கதையளந்துள்ளார் இந்த அறிவாலய அறிவுஜீவி. எடப்பாடியார் களத்தில் இறங்கியதும், அங்குள்ள மக்கள் படகுகளில் அலைவது வெளிச்சத்துக்கு வந்ததும், தனது ஏமாற்று வேலை அம்பலமாகிவிட்டதே என்று இந்த கையாலாகாத நபர் துடிக்கிறார். எடப்பாடியாரை திறமையற்றவர் என்று இவர் ஏகடியம் பேசியிருக்கிறார். காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பதுபோல், சொல் புத்தியோ, சுய புத்தியோ இல்லாத, துண்டு சீட்டில் எழுதி தருவதைக் கூட சரியாக படிக்கத் தெரியாத ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள இவருக்கு மற்றவர்கள் திறமையற்றவர்களாக தெரிவதில் ஆச்சர்யமில்லை.
தன் தலைவரின் திறமை பற்றியும், ஆட்சியில் இருந்தபோது எடப்பாடியாரின் செயல்திறன் பற்றியும் ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார்?. எந்த தகுதியுமில்லாமல் கிடைத்த பதவியை காப்பாற்ற ஓலமிடும் இந்த அரசியல் அறிவாலி தயாரா?. போகாத ஊருக்கு வழிகாட்டுவதிலும், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதிலும் வல்லவர்களான திமுகவினர், சிங்காரச் சென்னை அமைப்போம் என்று 1996 முதல் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பசப்பு வார்த்தை பேசிவிட்டு இன்று மாநகரை அலங்கோலமாக்கியுள்ளனர். இதற்கு வக்காலத்து வாங்கும் அமைச்சர் அன்பரசன் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, டெண்டர் என்றெல்லாம் உளறியிருக்கிறார்.
மூன்று முறையாக ஆலந்தூர் தொகுதியின் உறுப்பினராகவும், தற்போது இரண்டாம் முறையாக அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அன்பரசன் அவரது தொகுதியின் மழைநீர் கட்டமைப்பு பற்றியோ, மழை நீரின் போக்கு பற்றியோ கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, ஒரு சின்ன மழைக்கே 10 நாட்களாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத அவல நிலையை எடப்பாடியார் நேற்று பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்கியதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் , நிரந்தர தீர்வுக்கு விடை கண்டுபிடிக்க வழி காணாமல், நெடுஞ்சாலை என்றும், பொதுப்பணித் துறை என்றும் சீண்டி இருப்பது அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது.