சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதனிடையே தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். மேலும் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு கட்ட திட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தொழிநுட்ப பிரிவினர் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது, “நடிகர் விஜய் ரசிகர் மன்றம் 31 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இனி வரும் காலங்களில் நாம் வேறு பரிணாமங்களில் பயணிக்க இருக்கிறோம். அதற்கேற்ற வகையில் இயக்கத்தின் பல்வேறு அணிகளின் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில் இன்று தகவல் தொழிநுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் நடிகர் விஜய்யின் சார்பாக வாழ்த்துக்கள். இயக்கத்தை பொறுத்தவரை இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளை பலமாக வைத்திருக்கும் ஒரு இயக்கம் விஜய் மக்கள் இயக்கம்.