சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் தற்போது தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 02) அறிவித்துள்ளது.
அதில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சையளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ( Test - Track - Treat vaccination- Covid = 19 Appropriate Behaviour ) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நிலையான கரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் பின்பற்ற வேண்டியவை:
கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர , இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.