தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Rain: ஆவடியிலேயே நிறுத்தப்பட்ட சென்னை ரயில்கள் : டாக்சிக்களில் படையெடுக்கும் மக்கள் - சென்னை சென்ட்ரல்

கனமழை காரணமாக, சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தண்டவாளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், லால்பாக் மற்றும் சதாப்தி விரைவு ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

waterlogging in chennai basin bridge lalbagh express train stopped in avadi station
சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் - பயணிகள் அவதி!

By

Published : Jun 19, 2023, 4:59 PM IST

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, இன்று( ஜூன் 19ஆம் தேதி) காலை 6:00 மணி அளவில் சுமார் 14 பெட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சதாப்தி அதிவிரைவு ரயில் சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் ஆவடி ரயில் நிலையம் அருகே வந்த போது கனமழை பெய்ததால் அங்கேயே சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் சென்னை சென்ட்ரல் செல்லும் வழித்தடமான பேசின் பிரிட்ஜ் அருகே தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்த சதாப்தி அதிவிரைவு ரயில், ஆவடி ரயில் நிலையத்திலேயே பயணிகளை இறக்கி விட்டு பணிமனை நோக்கி சென்றது. இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வேண்டிய ரயில் பயணிகள், கனமழை பெய்து வருவதால் ஆவடியில் இருந்து எவ்வாறு செல்வது என விழிபிதுங்கி நின்றனர். மேலும் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டிய லால்பாக் விரைவு ரயில் கனமழை காரணமாகவும், பேசின் பிரிட்ஜ் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதாலும் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், சென்ட்ரல் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் ஆவடி ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதன்பிறகு இஞ்சின் மாற்றப்பட்டு, ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து மைசூர் நோக்கி லால்பாக் அதிவிரைவு ரயில் புறப்பட தயாராக உள்ளது. இதுகுறித்து சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், ஆவடி ரயில் நிலையத்திலும் ஒரு அறிவிப்பு வெளியானது.

அதில், 4வது நடைமேடையில் இருந்து ரயில் மதியம் 3 மணிக்கு மேல் புறப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், லால்பாக் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த பயணிகள், புறநகர் ரயில்கள்,ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி மூலமாக ஆவடி ரயில் நிலையம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக, ஆவடி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் லால் பாக் விரைவு ரயில், ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து பயணிகளும் வரும் வரை காத்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருவள்ளூர், காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனமழை காரணமாக இந்த இரண்டு ரயில்களின் அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ரயிலில் பயணிக்கும் பெண்கள்,முதியவர்கள் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். அதுமட்டுமில்லாமல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தங்களின் பயணம் மிகவும் மோசமாக அமைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: TN Rain Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details