தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால் தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக விலகலை பொதுமக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்திவருகிறது.
மக்கள் தகுந்த இடைவெளியுடன் தண்ணீரைப் பெறுவதற்கு சென்னை குடிநீர் வாரியம் ஒரு திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதாவது குடிநீர் விநியோகிக்கும்போது மக்கள் அதிகம் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அதனைத் தவிர்க்கும் விதமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் தொட்டிகளை அமைத்து, அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மாநகரப் பகுதிகளில் லாரிகள் மூலம் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 650 லாரிகள் மூலம் 5,695 ட்ரிப்கள் என குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. அப்படி குடிநீர் வழங்கப்படும்போது மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அதிகப்படியான மக்கள் ஒன்றுகூடும் நிலை ஏற்படும் என்பதால், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் தற்போது 6,183 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தினமும் தண்ணீர் நிரப்பட்டு அதிலிருந்து தகுந்த இடைவெளியுடன் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.