சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று (நவ.29) காலை முதல் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
சென்னையில் இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால் சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100-அடி சாலை, போரூர் புறவழிச்சாலை, அண்ணா நகர் நிழற்சாலை, ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர், ஆவடி, திருமங்கலம், புதிய ஆவடி சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மிகுதியாக காணபட்டது.
குறிப்பாக, புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், மாதவரம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். நேற்று இரவு 10 மணி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தீவிர மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நகரின் பல பகுதியில் 10 செ.மீ வரை மழை பதிவானது.
பொதுமக்கள் அவதி: சென்னை கொரட்டூர் வடக்கு நிழற்சாலை சிஎஸ்ஐ சர்ச் மழைநீரில் தத்தளிக்கிறது. மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நின்றதால், குடியிருப்பு பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் இந்து முன்னணி அலுவலகம் எதிரில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் மக்கள் வெளியில் வரமால் அவதிப்பட்டனர். மேலும், நகரின் பல தாழ்வன பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் பழுதாகி நின்றன.
ரயில்கள் ரத்து:அம்பத்தூர், ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில், மங்களூர் சென்ட்ரல் மெயில், ஆலப்புழா அதிவிரைவு ரயில், நீலகிரி அதிவிரைவு ரயில், காவேரி விரைவு ரயில், பாலக்காடு அதிவிரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாக இயக்கப்பட்டது.