தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர் - தண்ணீர் பஞ்சம்

சென்னை: மழையில்லாமல் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கித் தர வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறினார்.

thirunavukarasar

By

Published : Jun 23, 2019, 10:48 PM IST

சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை இருப்பது உண்மை. சென்னை உள்பட பல மாவட்டங்களில் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கிராமங்களில் குளம், ஏரி ஆகியவற்றில் தண்ணீர் இல்லை, கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத நிலை. மத்திய அரசை அணுகி தமிழ்நாடு அரசு நிதியை ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு தண்ணீர் பஞ்சம் இல்லை, யாகம் செய்துவிட்டோம் என்று சொல்வதில் எந்தவித பயனும் இல்லை. யாகம் செய்து மழை பெய்தால் தொடர்ந்து யாகம் நடத்தட்டும். யாகம் ஒரு பக்கம் நடந்தாலும் மக்களுக்கு தண்ணீர் விநியோகமும் நடக்க வேண்டும்.

பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான். தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கித் தரவேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆளும்கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தல்களில் தோல்வி கிடைக்கும் என்று ஆளும்கட்சிக்கு தெரியும். இதனால் தேர்தலை தள்ளிப்போட தான் முயற்சிப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் குறித்து பேசுவோம். கூட்டணி பற்றி பேசவோ, விவாதம் செய்யவோ அவசியமில்லை' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details