சென்னை: கடந்த ஜூன் 30ஆம் தேதி மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பு ஆறாயிரத்து 672 மில்லியன் கியூபிக் அடியாக இருந்தது. ஜூலை 16ஆம் தேதி நிலவரப்படி ஏழாயிரத்து 96 மில்லியன் கியூபிக் அடியாக உயர்ந்தது.
செம்பரம்பாக்கம், ரெட் ஹில்ஸ், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தாலும், கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் நீர்வரத்து உயர்ந்துள்ளது. மேலும், பூண்டி ஏரிக்கு ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து 620 கன அடி கிருஷ்ணா நதிநீர் வந்துகொண்டிருக்கிறது.
மெட்ரோ ஏரிகளின் நீர் மட்டம்
இன்றைய நிலவரப்படி 140 மொத்த அடி கொண்ட பூண்டி ஏரி 130.56 அடியை எட்டியுள்ளது. 65.50 மொத்த அடி கொண்ட சோழவரம் ஏரி 60 அடியைத் தொட்டுள்ளது. இதேபோல 85.40 மொத்த அடி கொண்ட செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் 85.25 அடி நீர் இருப்பு உள்ளது.
சென்னையில் நேற்று (ஜூலை.18) நுங்கம்பாக்கத்தில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யார், சூலகிரியில் தலா 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.