அனுமதி இல்லாமல் செயல்படும் தண்ணீர் கேன்கள் தயாரிக்கும் ஆலைகளை மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு முழுமையாக நூற்றுக்கணக்கான ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சீல் வைக்கப்படும் ஆலைகள் விஷயத்தில் அரசு அலுவலர்கள் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்து தண்ணீர் கேன் தயாரிப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஐந்தாம் நாளாக தொடரும் இந்த போராட்டத்தால் சென்னையில் போதிய கேன் தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்திற்கு தண்ணீர் கேன் உரிமையாளர்கள் சொல்லும் முக்கிய காரணம் பல இடங்களில் முறையாக அனுமதி பெற்ற ஆலைகளையும் அலுவலர்கள் மூடி வருகிறார்கள் என்பதாகும். மேலும் அரசின் உத்தரவுப்படி ஆலைகளுக்கு முறையான அனுமதி வழங்க முயற்சிக்கலாம், அதனை விடுத்து ஒட்டு மொத்தமாக மூடும் நிகழ்வுகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள் என்பதால் கேன் தண்ணீர் தயாரிப்பாளர்களுக்கு என்ன தேவை என்பது அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கேன் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. குறிப்பாக கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் என குடிநீர் கேன் தண்ணீரை நம்பியுள்ள பிற நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.