தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பதவியேற்பு விழாவை இல்லத்தில் இருந்தே கண்டுகளிக்க வேண்டுகோள்' ஸ்டாலின்

Stalin Statement
ஸ்டாலின் அறிக்கை

By

Published : May 6, 2021, 3:33 PM IST

Updated : May 6, 2021, 3:56 PM IST

15:28 May 06

ஸ்டாலின் அறிக்கை

சென்னை:கரோனா காலம் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது என்றும், உங்கள் உடல்நலமே முக்கியம் என்பதால் தொண்டர்கள் இல்லத்தில் இருந்தே கண்டுகளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்," தமிழர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒளி விளக்காய், நம் நாட்டுக்கு எப்போதும் நற்பணியாற்றும் தொண்டனாய்த் திகழ்ந்துவரும்; அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, தமிழ்நாட்டு மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.  

ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட இயக்கம் தான் தி.மு.க. தற்போது ஆறாவது முறையும் ஆட்சி அமைக்கும் அரிய வாய்ப்பைத் தமிழ்நாடு மக்கள் மனமுவந்து வழங்கி இருக்கிறார்கள். தனிப்பெரும்பான்மை கட்சியாக திமுகவுக்கு ஆட்சி அமைக்கும் நல்வாய்ப்பை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 4ஆம் தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூடியது.  

அக்கூட்டத்தில் திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக எனது பெயரை மரியாதைக்குரிய பொதுச் செயலாளர் துரைமுருகன்  முன்மொழிந்தார்கள். அதை முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார்கள். உதயசூரியன் எனும் ஒப்பற்ற சின்னத்தில் வென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருமனதாக இதனை ஏற்றுக் கொண்டார்கள். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

பேரறிஞர் அண்ணா அலங்கரித்த நாற்காலியில், முத்தமிழறிஞர் கலைஞர் அமர்ந்து கோலோச்சிய பொறுப்பில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளர்த்துக் கொண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

தி.மு.க. சட்டப்பேரவை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பொறுப்பு ஏற்பு செய்து வைக்க இருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித். சட்டப்பேரவை உறுப்பினர்களது ஆதரவுக் கடிதத்தை நேற்றைய தினம்(மே.5) காலையில் ஆளுநரிடம் ஒப்படைத்து வந்தோம். நாளை (மே 7) காலை 9 மணியளவில் பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர் பெருமக்களும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.

மே - 7, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொள்ளும் நாளாக மாற இருக்கிறது. திமுக ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி, கலைஞரின் கனவு நிறைவேறுகிறது என்ற மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மனதின் ஓரத்தில் கவலையும் ஏற்படுகிறது.

இரத்தமும், வியர்வையும் சிந்தி, நமது வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து, அவர்களுக்கு முன்னால், அவர்களின் மனம் நிறைவு கொள்ளும் வண்ணம், பதவியேற்க முடியவில்லையே என்பதுதான் எனது கவலைக்குக் காரணம். இந்த வெற்றிக்குக் காரணமான கதாநாயகர்கள், உடன்பிறப்புகளும் தோழர்களும் ஆகிய நீங்கள் தான். உங்களது அயராத உழைப்பால், அசைக்கவியலாத உறுதியால், கம்பீரத்தால், கடின முயற்சியால் கிட்டியது இந்த வெற்றி.  

அதனால் மிகப்பெரிய அளவில், தொண்டர்கள் முன்னிலையில், பதவி ஏற்பு விழாவை நடத்தலாம் என்று தேர்தலுக்கு முன்னதாகவே சிந்தித்து வைத்திருந்தேன். ஆனால் கரோனா என்ற பெருந்தொற்று, இரண்டாவது பேரலையாக எழுந்து வீசும் இந்தச் சூழலில், அத்தகைய மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது.  

அதனால் ஆளுநர் மாளிகையில், மிக எளிய முறையில் நாளை (மே.7) காலை 9 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோர் உடன்பிறப்பின், தோழரின் உடல்நலன்தான் எனக்கு முக்கியம். அதனால் அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே, விழாவைத் தொலைக்காட்சி நேரலையில் காணுங்கள், தொண்டர்கள் அனைவரும் உடலால் உங்கள் வீட்டில் இருந்தாலும், உள்ளத்தால் சென்னையிலேதான், எம்முடனேதான் இருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.  

இந்த உடன்பிறப்பு எனும் பாச உணர்வுதான் மகத்தான வெற்றிக்குக் காரணம். திமுக ஆட்சி, கலைஞர் ஆட்சி என்பதே, பல இலட்சக்கணக்கான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்ட சொல் தான். 'இத்தனை தொண்டர்களைப் பெற்றெடுக்க ஒரு தாய் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் நாம்' என்றார் பேரறிஞர் அண்ணா.  

அத்தகைய கலைஞர் எனும் ஒரு தாய்ப் பிள்ளைகளான திமுக தொண்டர்கள் அனைவரும் இருக்கும் திசை நோக்கி வணங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க நான் தயாராகிவருகிறேன். உங்களது உழைப்பு திமுக ஆட்சியை மலர வைத்தது. உங்களது வாழ்த்து எங்களைப் பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்றுசேர்ந்து, தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும், சம உரிமையும் கடமையும் உடைய, உயர்வான தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : May 6, 2021, 3:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details