சென்னை நகரை பொறுத்தவரை மழை காலம் தொடங்கியதும் சாலைகளில் ஆங்காங்கே கழிவு நீர் கலப்பது, அவற்றால் சாலைகளில் கழிவுகள் தேங்குவது என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதை கண்டுள்ளோம். இதுபோன்ற பாதிப்புகளினால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வர உள்ள மழை காலத்தை எதிர்கொள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது என சென்னையில் செய்திகள் வலம் வந்தன.
சென்னையில் பெரும்பாலான கழிவு நீர் பகுதிகள் கான்க்ரீட்டால் ஓரப்பகுதிகள் அடைக்கப்பட்டு மேல் மூடிகள் அமைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அவற்றில் உடைபாடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மட்டும் குடிநீர் வாரியத்தால் சீரமைக்கப்படும் பணி நடைபெறுகிறது. மற்ற பகுதிகள் அனைத்திலும் வாரியத்தால் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் கால்வாய்களின் அடைப்புகளை நீக்குவது, தூர்வாரி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் சீராக்குவது உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த தினந்தோறும் 500 ஊழியர்கள் பணியில் இருப்பதாகவும் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களால் தெரிவிக்கப்படுகிறது.