கழிவு நீர் தேங்குவதால் பாதிக்கப்படும் சதுப்பு நிலம் சென்னை:சென்னையில் முக்கியமான பகுதியாக உள்ளது பள்ளிக்கரணை சதுப்புநிலம். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (12.949371 N அட்சரேகை மற்றும் 80.218184E தீர்க்கரேகையின் புவி-ஆயங்களில் அமைந்துள்ளது). சென்னை நகரின் கடைசியாக மீதமுள்ள இயற்கை ஈரநிலங்களில் ஒன்றாகும். இதனை 'கழுவேலி' எனவும் கூறுகின்றனர். அதாவது வெள்ள சமவெளி அல்லது நீர் தேங்கிய பகுதி.
அதன் கிழக்கு பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தென் சென்னையின் 250 கிமீ2 பரப்பளவில் 65 சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய ஒக்கியம் மடவு மற்றும் கோவளம் சிற்றோடை வழியாக வங்காள விரிகுடாவில் விழுகிறது.
694 ஹெக்டேர் பரப்பளவு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், தமிழ்நாடு வனச்சட்டம் - 1882 இன் பிரிவு 16ன் கீழ் ரிசர்வ் வனமாக அறிவிக்கப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2022ஆம் ஆண்டில் 1247.54 ஹெக்டர் நிலப்பரப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் சென்னை நகரில் உள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமே நகரின் எஞ்சியிருக்கும் ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பாகும். மேலும், இது தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள சில மற்றும் கடைசி இயற்கை ஈரநிலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.
ஆனால், தற்பொழுது டிசம்பர் 4, 5 ஆகியத் தேதிகளில் சென்னையில் பெய்த மழையின் போது சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் போன்றப் பகுதிகளில் மழைநீர் தேங்கியதற்கு முக்கியக் காரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்ததும், வேளச்சேரி உள்ளிட்ட ஏரிகளையும் ஆக்கிரமித்துள்ளதும் தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து பூஜ்ஜியம் அல்லது ஒரு அடி மட்டுமே உயரமாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் பக்கிங்காம் கால்வாய் வழியாக மழைநீர் முட்டுக்காடு கடலை நோக்கிச் செல்லக் கூடிய ஒங்கியம் மவுடு பகுதியில் ஆகாயத் தாமரையின் தடுப்பதால் மழைநீர் சீராக கடலில் சென்று சேர முடியாமல் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து கொள்கிறது.
அரசு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை சட்டவிரோதமாக குடியிருப்புப் பகுதியாக மாற்றியதால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெருநகர மாநகராட்சியின் 14-வது மண்டலமாக இருப்பது பள்ளிக்கரணை.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஹரிஷ் சுல்தான், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்திற்கு வேளச்சேரி, ஆதம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் செல்லும் கால்வாய் ஆழம் குறைவாகவே உள்ளது. அதில் முழுவதும் கழிவு நீர் செல்கிறது. வருடம் முழுவதும் கழிவு நீர் சென்றால் மழைநீர் எவ்வாறு உள்ளே செல்லம்.
சதுப்பு நிலப் பகுதியில் நன்னீர் சதுப்பு நிலப் பகுதி, உவர்நீர் சதுப்பு நிலப் பகுதி உள்ளது. நன்னீர் சதுப்பு நிலப் பகுதி அரிதானது. பள்ளிக்கரணை அற்புதமான நன்னீர் சதுப்பு நிலப் பகுதி. அதில் கழிவு நீரை அனுப்பி மோசமான நிலையை உருவாக்கி வைத்துள்ளோம். கழிவு நீர் செல்லும் போது படியும் வண்டல்களால் தண்ணீர் செல்வது தடைப்படும். சதுப்பு நிலம் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும். பூமிக்குக்கீழ் நீராதாரமாக சேமிக்கும்.
கழிவுநீரினால் படிந்த வண்டல் காரணமாக பூமிக்குள் தண்ணீர் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் வெள்ளம் வரும் போது தண்ணீர் வெளியே சென்றது. தண்ணீர் வெளியில் செல்லும் போது தேங்கித் தான் வெளியேறும். வேளச்சேரி, ஆதம்பாக்கம், பெரும்பாக்கம் போன்ற பகுதிகள் வெள்ளதால் சூழப்பட்டதற்கு காணரம் சதுப்பு நிலத்தை பாதுகாக்காமல் விட்டது தான்.
ராம்சார் நிலம் என அறிவித்து இருந்தாலும், அதனை பாதுகாக்க வேண்டும். இதனை பாதுகாத்தால், வெள்ளம் வரும் போது தடுப்பதுடன், வறட்சியிலும் தண்ணீர் தரும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 6 ஆயிரம் ஹெக்டர் இருந்தது. அதனை ஆக்கிரமிப்பு செய்தப் பின்னர் 656 ஹெக்டர் தான் இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட பகுதியாக 358 ஹெக்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை விடுகின்றனர். இதனால் வண்டல் படிந்து, வேளச்சேரி, ராம்நகர் போன்ற பகுதியின் மட்டமும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மட்டமும் ஒன்றாக இருக்கிறது. 300 ஏக்கருக்கு மேல் மாநகராட்சி குப்பையை கொட்டி நாசப்படுத்தி உள்ளது.
அதேபோல் வேளச்சேரி ஏரி 250 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்பொழுது 55 ஏக்கராக இருக்கிறது. 20 ஆண்டுக்கு முன்னர் 150 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அரசுப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டனர்.
ஏரியை தூர்வாரி, கரையை வலுப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர், பிறப் பகுதியில் இருந்தும் மழைநீர் கால்வாயில் கழிவு நீர் கலந்து வருகிறது. வேளச்சேரியில் உள்ள 55 ஏக்கர் ஏரியையும் சரியாக அரசு பராமரிக்கவில்லை. கழிவு நீரை தேக்கும் ஏரியாக உள்ளதே தவிர, மழைநீரை சேகரிக்கும் ஏரியாக இல்லை” என கூறினார்.
இதையும் படிங்க: தென்மாவட்ட வெள்ள பாதிப்பு; நிவாரணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!