சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கியதில் 4 கோடியே 13 லட்சம் ரூபாய் தேவையற்ற செலவீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இலவச சீருடை கோரும் பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கலாம், வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் மட்டுமே இலவச சீருடை அணிய அனுமதிக்கும் பள்ளிக்குச் சீருடைகள் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை பரிந்துரைத்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நான்கு சீருடைகள் இலவசமாகத் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சீருடைகள் ஒன்றாம் முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2021 - 22 ஆம் ஆண்டு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை 47. 89 லட்சம். அவர்களின் 38.41 லட்சம் பேர் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நான்கு மாவட்டங்களில் உள்ள 1,425 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 214 மாதிரி பள்ளிகளில் சீருடை பயன்பாடு குறித்த தணிக்கை ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 66 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 48 பள்ளிகளில் பள்ளிகளின் நிர்வாகங்கள் வெவ்வேறு வண்ணம் மற்றும் வடிவமைப்பு கொண்ட சீருடையை அமல்படுத்தி உள்ளதால் அரசு வழங்கிய இலவச சீருடை அணியவில்லை. வேறு 13 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணிந்தனர். மீதமுள்ள நாட்களில் அவர்கள் பள்ளி நிர்ணயித்த சீருடையை அணிவது தெரியவந்துள்ளது.