தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விசாரணை நடத்த நேரிடும்' - கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் பெற்றோருக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறை விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்றால், பெற்றோரை விசாரிக்க உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

By

Published : Dec 15, 2022, 6:25 PM IST

விசாரணை நடத்த நேரிடும்
விசாரணை நடத்த நேரிடும்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்தில் நியாயமான விசாரணை நடத்தக்கோரி தந்தை ராமலிங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி கடந்த முறை உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று (டிச 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக பெற்றோர்கள் இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், காவல்துறையின் விசாரணை இரண்டு மாதங்களில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தந்தை ராமலிங்கம் தரப்பில், பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவர்களின் அறிக்கை ஆகியவை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தனது மகள் ஶ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை. விடுதி வார்டனின் செல்போனிலிருந்தே பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்னை உள்ளது என்றும், ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார். அதுகுறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் சட்டப்படி குற்றம் எனவும், அதற்காக விசாரிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து, செல்போன் இருந்தால் உடனடியாக அதனை ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க:அரசியல் இல்லாமல் எழுத்தும் கலையும் இல்லை: எழுத்தாளர் இமையம் உடன் சிறப்பு நேர்காணல்!

ABOUT THE AUTHOR

...view details