சென்னை :ஜெர்மனியில் இருந்து சென்னை திரும்பிய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் கடந்த வாரம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்கு பின் உலக செஸ் சாம்பியப்ன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்ற வீரர் என்ற சிறப்பையும் பிரக்ஞானந்தா பெற்றார்.
நார்வே வீரர் கார்ல்சனுக்கு கடும் நெருக்கடி கொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பிடித்தார். இந்நிலையில், அங்கிருந்து ஜெர்மனியில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று (ஆகஸ்ட். 30) சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு தரப்பில் பூங்கொத்து கொடுத்து பிரக்ஞானந்தாவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பிரக்ஞானந்தாவை வரவேற்க திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். திறந்தவெளி வாகனம் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ள செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அரசு தரப்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.