சென்னை:பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பிரபல ரவுடியான புளியந்தோப்பைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இந்த வழக்கு குறித்து பட்டினப்பாக்கம் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் அரக்கோணம் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி, நெல்லை ராமையன்பட்டியைச் சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார், முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த ரவுடி எட்வின் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் காவல் துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ஆயிரம் விளக்கு அதிமுக 111 ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய இருவரையும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று (செப்.04) காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் ஜான் கென்னடி பிரபல ரவுடியாக இருந்து, காவல் துறை உயர் அதிகாரிகள் பரிசீலனையின் பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.