சென்னை : போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் நடந்தது. ஏற்கெனவே 3 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் ஆகியோர் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
ஏற்கெனவே இடைக்கால நிதியாக ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நிலையில் முழுமையாக ஊதிய ஒப்பந்தம் அறிவிப்பு கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
அமைச்சரின் கருத்து:கூட்டத்திற்குப்பின் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, 'மூன்றாண்டுக்கு முன் முடிந்து இருக்க வேண்டிய பேச்சுவார்த்தை இது. மூன்று முறை உடன்படிக்கைகள் ஏற்படாததால் நான்காவது முறையாக 66 தொழிற்சங்கங்கள் உடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொழிற்சங்கம் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 300 ரூபாய் பேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் இலவசப்பேருந்தில் பணி செய்பவர்களுக்கு கூடுதலாக பேட்டா வழங்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலான கோரிக்கைகளுக்கு உறுதி செய்துள்ளோம்.
போக்குவரத்து பணியாளர்களுக்கு வழங்கப்படும் 15 படிகளை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பணி காலங்களை ஆய்வு செய்து கணக்கீட்டு அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% இருந்து 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தொழிலாளர்கள் சம்பள விகிதத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகளைத்தீர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக அலுவலர்கள் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து அது குறித்து பின்னர் பேசுவோம். இந்தப் பேச்சுவார்த்தை தொழிலாளர்களுக்கு சாதகமான ஒரு முடிவைத் தரும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக செல்லும். பேச்சுவார்த்தையில் 85% இருவருக்கும் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு புதிய பணி நியமன ஆணைகள் குறித்து நிதி அமைச்சர் உடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் ஒயிட் பேருந்துகள் கூடுதலாக ஆக்கப்பட்டு உள்ளதே தவிர குறைக்கவில்லை. பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் பெண்களின் சதவீதம் 61% ஆக உயர்ந்துள்ளது” என தெரிவித்தார். பின்னர் அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கமலகண்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்கள் கோரிக்கையை முழுமையாக அரசு பரிசீலிக்கவில்லை. மிகவும் சொற்பான ஊதிய உயர்வை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். அதிமுக ஆட்சியின்போது 25% ஊதிய உயர்வு கேட்டனர். தற்போது 8% தொமுச உள்ளிட்டவை முன்வைத்தனர். அதில் 5% தற்போது வழங்க அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.
தொமுச செயலாளர் சண்முகம் கூறுகையில், “ அதிமுக ஆட்சியில் செய்யாமல் விட்ட சிலவற்றை அமைச்சரிடம் எடுத்துக்கூறி உள்ளோம். குறிப்பாக ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க 2 வார காலம் அமைச்சர் அவகாசம் கேட்டுள்ளார்.