சென்னை: மறைந்த முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. ராமன், மத்திய அரசின் சட்ட அலுவலராக நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், இந்திய வழக்கறிஞர் கழகத்தின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். சட்டக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் ஆங்கில இதழான ஹோம் லேண்ட் இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் சமகால தலைவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றவராகவும் திகழ்ந்தார். வி.பி. ராமன், கல்வி மட்டுமின்றி, கர்நாடக இசை, ஆங்கில இலக்கியம், கிரிக்கெட் என்று பன்முகத்திறன் கொண்டவராகவும் விளங்கினார்.
வி.பி. ராமனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லக்கூடிய அவ்வை சண்முகம் சாலையை "வி.பி. இராமன் சாலை" என தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. வி.பி. ராமன் வாழ்ந்த லாயிட்ஸ் கார்னர் இல்லமும் இந்த சாலைப் பகுதியிலே அமைந்துள்ளது.