சென்னை:பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தி.நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தேவையில்லாமல் கருத்துகளை தெரிவித்துள்ளார். காவேரி, முல்லை, மேகதாது பிரச்சினையில் தமிழர்களுக்காக ஏதும் செய்யவில்லை என கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். தேசிய கல்வி கொள்கையில் பாஜக 1 முதல் 6ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயில வழிவகை செய்துள்ளது; ஹிந்தியை திணிக்கவில்லை.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜகவை இப்படி பேசுகிறார். தமிழ்நாடு பாஜக மக்கள் பிரச்சினைகளை தினமும் பேசுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. தினமும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது. அதிமுக பாஜக கூட்டணியில் இது ஒரு நிலையில் அதிமுக மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது குறித்து அக்கட்சி அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
அதிமுக 65 சட்டப்பேரவை உறுப்பினர் வைத்துகொண்டு எதிர்கட்சியாக சரியாக செயல்பட வில்லை. ஆனால், பாஜக நான்கு சட்டப்பேரவை உறுப்பினர் வைத்துகொண்டு எதிர்கட்சியாக அனைத்து கேள்விகளும் முன் வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, மின்சாரத்துறையின் ஊழல், பிறத்துறையில் நடைபெறும் ஊழல் குறித்து கேள்வி எழுப்புகிறோம். ஆனால், அதிமுக சட்டப்பேரவையில் ஊழல் குறித்து பேசவில்லை. அதற்கு காரணம் என்ன என்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதிலும் எதிர்க்கட்சியான அதிமுக வலுவாக செயல்படவில்லை. எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் வலுவாக செய்யப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜக தெரிவிக்கும் கருத்துகள் தவறாக இருந்தால், தமிழ்நாடு அரசு இது தொடர்பாக வழக்கு தொடரலாம்.