தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணையம் - இந்திய தேர்தல் ஆணைய உயர்நிலைக் குழு தமிழ்நாடு வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடு செய்து தரப்படும் என இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணையம்
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணையம்

By

Published : Dec 22, 2020, 9:25 PM IST

Updated : Dec 22, 2020, 9:31 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரின் நிலைபாட்டை கேட்டறியவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் உயர்நிலைக் குழு நேற்று (டிச.21) சென்னை வந்தது.

துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிகார் மாநில தலைமை தேர்தல் அலுவலர் ஹச்.ஆர் வத்சவா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் வத்சவா, தேர்தல் ஆணைய செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் அடங்கிய இந்த குழுவினர் நேற்று முதல் நாளாக தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.

உமேஷ் சின்ஹா செய்தியாளர் சந்திப்பு
தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்களுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹூ, தமிழ்நாடு டிஜிபி திரிப்பாதி, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு இயக்குநர் ராஜேஷ் தாஸ், சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (டிச.22) இரண்டாவது நாளாக தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, தமிழ்நாடு டிஜிபி திரிப்பாதி மற்றும் பல்துறை உயர் அலுவலர்களுடன் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா, " 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் மிக கவனத்துடன் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இந்த கரோனா காலத்தில் இரு பெரும் தேர்தல்கள் வந்த நிலையில் பிகார் மாநில தேர்தலை வெற்றிகரமாக முடித்துள்ளோம். அதேபோல் தமிழ்நாடு தேர்தலை எந்த பிரச்னைகளும் இன்றி நடத்தி முடிப்போம்.

மூத்த வாக்காளர்களுக்கு தபால் வாக்கு வசதி:

நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களின் வசதிக்காக இந்த முறை தபால் ஓட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. காவல் துறையினரின் உதவியுடன் இந்த முயற்சியை மேற்கொள்ள உள்ளோம். அதுமட்டுமல்லாமல் கரோனா தொற்றை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு ஆயிரம் பேர் வீதம் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சோதனை அடிப்படையில் மத்திய சென்னையில் கடந்த தேர்தலின் போது ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டதைப்போல் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவருக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என்றார்.

முகக்கவசம் கட்டாயம்

கரோனா பரவல் காரணமாக வாக்காளர்கள் தேர்தலின்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

வாக்காளர்களுக்காக அனைத்து பொது இடங்களிலும் தேர்தல் ஆணையத்தின் க்யூார் கோட் (QR Code) அடங்கிய பதாகைகள் வைக்கப்படும். அதன் மூலம் அனைவரும் தங்களின் வாக்காளர் அட்டை குறித்த சந்தேகங்களை தெரிந்துகொள்ளலாம் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க:வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர்

Last Updated : Dec 22, 2020, 9:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details