தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 200 வார்டுகளுக்கான வாக்காளர்களின் பட்டியலை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) லலிதா இன்று ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய லலிதா, ‘மேற்படி வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி தலைமையிடம், மண்டலங்கள் 2 முதல் 15 வரை மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும், இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.
சென்னை மக்களின் வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்ந்து பேசிய அவர், ‘சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளில் வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச் சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச் சாவடிகளும், அனைத்து வாக்களர்களுக்கு 50,558 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,714 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்த வாக்காளர் எண்ணிக்கை 57 லட்சத்து 97ஆயிரத்து 652 ஆகும். இதில் குறைந்தபட்சமாக மண்டலம் 12இல் உள்ள வார்டு 159ல் 2,921 வாக்காளர்களும், அதிகபட்சமாக மண்டலம் 10இல் உள்ள வார்டு 137இல் 54,801 வாக்காளர்களும் உள்ளனர்’ என்று விளக்கமளித்தார்.