தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறமால் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதின்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக செய்துவருகிறது. அதன்படி முதற்கட்டமாக மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள பிடிஓ-வினர் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். மேலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.