கரோனா தொற்றால் இறந்தவர்களின் உறவினர்கள்கூட கரோனா அச்சம் காரணமாக அவர்களது உடல்களை அடக்கம் செய்ய முன்வருவதில்லை. குறிப்பாக கரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல் கண்ணியமான முறையில் அவர்களின் மத நம்பிக்கைபடி அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரெண்ட் சார்பாக தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல், பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் தலைமையில் நடைபெற்று வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி சென்னையில் இதுவரை 90 உடல்களை பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் தன்னார்வலர்கள் அடக்கம் செய்துள்ளனர். சென்னை முழுவதும் பகுதி வாரியாக 18 குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது ஆறு பேர் என மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலை பாப்புலர் ஃப்ரெண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர்கள் வண்ணாரப்பேட்டை கபர்ஸ்தான் பள்ளியில் நல்லடக்கம் செய்தனர்.