சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தநிலையில், பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக "தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021"-ஐ கொண்டு வந்தது.
இதற்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க ஒப்புதல் அளிக்க மே 25ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இதற்கு கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் ட்விட்டர் நிறுவனம் சில ஆட்சேபங்களை தெரிவித்துள்ளது.
இதற்கு ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், அனைத்து குடிமக்களுக்கும் தனி உரிமையை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அதேநேரத்தில் சட்டஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசைகலைஞரும் பாடகருமான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், ஒரு இசைக் கலைஞர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரமான கருத்துரிமை, தனியுரிமை ஆகியவற்றை மதிப்பதாகவும், தனியுரிமை என்பது இசையைப் போல ஒரு அனுபவம் என குறிப்பிட்டுள்ளார்.