சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 பிரிவு 18(1)இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதியின்படியும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கு எண் டபிள்யூ.பி.14224/2017 தீர்ப்பாணையின்படியும் அனைத்து வகை பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மைச் சான்று, அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். தடையின்மைச் சான்று, அங்கீகாரமின்றி எந்த ஒரு பள்ளியும் செயல்படக் கூடாது என ஏற்கனவே பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வுசெய்து தடையின்மைச் சான்று, அங்கீகாரமின்றி செயல்பட்டுவந்த பள்ளிகளுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதுபோன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாததுடன், அப்பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் எழுத இயலாத நிலையும் ஏற்படுகிறது.
எனவே சென்னை மாவட்டம் அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் தடையின்மைச் சான்று, அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டுவருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த வகை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் அந்தப் பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.