சென்னை :அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது தோழியான வி.கே.சசிகலாவை இடைக்கால பொது செயலாளராகவும், டிடிவி.தினகரனை துணை பொது செயலாளராகவும் அதிமுக-வினர் தேர்ந்தெடுத்தனர்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர். இந்த நிலையில் இடைக்கால பொது செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர முடியாது என உத்தரவிட்டு வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை, அந்த கூட்டத்தில் அவர்களாகவே தங்களை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டதாக வாதிடப்பட்டது.