சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் விகே சசிகலா அளித்த பேட்டி சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னை மேடவாக்கத்தில் நேற்று (பிப்.24) இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விகே சசிகலா, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “உச்ச நீதிமன்ற தீர்ப்பு 80 பக்க தீர்ப்பு. எங்கள் வழக்கறிஞர்கள் பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள். இந்த வழக்குக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. என்னுடைய வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிறது. இந்த 22 மாதங்களில் எந்த வேலையும் செய்யவில்லை.
ஆமை வேகத்தில் அரசு நடக்கிறது. மக்களுக்குப் பணம், பொருளைக் கொடுத்து ஒட்டு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். இது இடைத்தேர்தல்தான். இதனால் ஆட்சி மாற வாய்ப்பில்லை. பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடத்தை திமுக அரசுக்குக் கொடுப்பார்கள். நாங்கள்தான் அதிமுக என்று தனி நபர் யாருமே முடிவெடுக்க முடியாது.
அதிமுகவைப் பொறுத்தவரைக் கீழ் மட்ட தொண்டர்களின் முடிவுதான் இறுதி முடிவு. இதனால் யாருக்கும் பின்னடைவு கிடையாது. வாக்குறுதி நிறைவேற்றாத திமுகவிற்கு நிச்சயமாக வருகிற தேர்தல் பாதிப்பு ஏற்படுத்தும். திமுக ஆட்சியில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பதை நான் பார்த்து வருகிறேன். அதிகாரிகள் மட்டத்தில், எங்களுக்குத் தகவல் தருகிறார்கள்.
அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை 4 பேர் முடிவு செய்கிறார்கள். அதிகாரிகள் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். அமைச்சர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அரசு சிறப்பாக நடக்கும். தமிழ்நாட்டில் தொழில் செய்யும் நிறுவனங்களிடம் திமுக பங்கு கேட்கிறார்கள். இதனால் நிறுவனங்கள் தொழில் செய்யப் பயப்படுகிறார்கள்.
திமுக ஒவ்வொரு நிறுவனத்தையும் மூடி வருவதால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து எடுத்துரைப்பேன். ஈரோடு கிழக்கில் யாரும் நடமாட முடியவில்லை. ஒருங்கிணைந்த அதிமுகவாக மாறும். மக்கள் நம்பி வாக்களிப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க:'அதிமுக' ஒற்றைத் தலைமை வழக்கு கடந்து வந்த பாதை!