தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஹேம்நாத் தான் கொலை செய்தது...'  சித்ராவின் பெற்றோர் ஆவேசம்! - சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்

சித்ரா கணவர் ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருப்பதாகவும், சித்ரா கழுத்தில் கடித்த தடயம் இருப்பதாகவும் புகைப்பட ஆதாரத்தை காட்டி சித்ரா பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் பெற்றோர்
செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் பெற்றோர்

By

Published : May 13, 2022, 11:08 PM IST

Updated : May 14, 2022, 7:12 AM IST

சென்னை:பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நசரத்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. காவல் துறையினர் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் சில நாள்களுக்கு முன்பு தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சித்ரா உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சித்ராவின் பெற்றோர் இன்று (மே 13) சென்னை திருவான்மியூர் வீட்டில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சித்ராவின் தாயார் விஜயா கூறுகையில், "சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில ஹேம்நாத் தற்போது சித்ராவை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். ஏன்? எதற்காக?. இவ்வளவு ஆண்டுகளாக கோமாவில் இருந்தாரா? அல்லது குடித்துவிட்டு போதையில் இருந்தாரா? இப்போது ஏன் பேச வேண்டும்.

சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு என்பது அவருக்கு தான் தெரியும். சம்பவத்தன்று வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, சித்ராவை விடுதியில் ஏன் தங்க வைத்தார். சித்ராவின் முகம் கழுத்து உள்ளிட்டப் பகுதிகளில் காயம் உள்ளது. இது திட்டமிட்ட கொலை. காவல் துறை விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை, போலீஸ் குடும்பமான எங்களையே போலீசார் மிரட்டுகின்றனர்.

சில யூட்யூப் சேனல்களில் சித்ராவை பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். சித்ராவிற்கு கஞ்சா புகைக்கும் பழக்கும் இருக்கு என்றும் அவருடைய பையிலிருந்து 150 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும் கூறிய காவல் துறையினர், சிறிதளவே எங்களிடம் காண்பித்தனர். அவர்கள் சொன்ன 150 கிராம் கஞ்சா எங்கே? ஹேம்நாத்திற்கு தான் குடிப்பழக்கம், தேவையற்ற நண்பர்களின் பழக்கம் உள்ளது. ஹேம்நாத்தின் நண்பர்களை எங்கள் வீட்டிற்கு வரவேண்டாம் எனக் கூறினேன். ஹேம்நாத்துடன் சேர்ந்துதான் சித்ராவிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் பெற்றோர்

எங்களுக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. வீட்டின் அருகே கடைக்குச் சென்று வீடு திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் சென்றவர் என்னை மிரட்டி விட்டுச்சென்றார். அவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறுகின்றனர். பட்டுப் புடவையில் எப்படி தூக்கிட்டு கொள்ள முடியும். அவர் தூக்கில் தொங்குவது போன்ற புகைப்படம் உள்ளதா? சித்ராவின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பல் பதிந்த காயம் உள்ளது. சித்ராவின் தந்தை காமராஜ் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றியவர். எத்தனையோ உடற்கூராய்வுகளை பார்த்தவர். அவரையே காவல் துறையினர் ஏமாற்றுகின்றனர்.

எங்கள் வீட்டில் இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் இல்லை. ஆனால், எங்களை கட்டாயப்படுத்தி சித்ராவின் உடலை எரிக்க வைத்தனர். சித்ராவிற்கு புகைப்பழக்கம், குடிப்பழக்கம் உள்ளது என்று கூறுகின்றனர். அவரின் உடமைகளை நான் பார்த்து கொள்வேன். அதில் சிகரெட் இருந்து நான் பார்த்ததில்லை. தேவதை போல் வைத்துக்கொள்வேன், என் பொண்ணை கடைசியில் தேவதையாகவே ஆக்கியுள்ளான் ஹேம்நாத். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த வழக்கில் தலையிட்டு எங்களுக்கு நீதி வழங்க வேண்டும். உண்மையை கண்டறிய ஹேம்நாத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்திட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து சித்ராவின் தந்தை காமராஜ் கூறுகையில், "என்னுடைய பணிக்காலத்தில் சுமார் 500 உடற்கூராய்வுகளை பார்த்துள்ளேன். பிரேதத்தை பார்க்கும் போதே கொலையா, இயற்கை மரணமா என்பதை ஊகிக்க முடியும். சித்ராவின் உடற்கூராய்வின்போது சரியான மருத்துவர் இல்லாத காரணத்தினால், சித்ரா மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சித்ராவின் கழுத்து, நெஞ்சு ஆகியப் பகுதிகளில் காயங்கள் உள்ளன. ஆனால், காவல் துறையினர் அவற்றை மறைக்கின்றனர். காவல் துறையினர் என்னை கீழ்த்தரமாக நடத்தினர். ஹேம்நாத்தின் பின்புலத்தில் யாரோ அவரை இயக்குகின்றனர். அவர் யாரென்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சித்ராவின் முகத்தில் இருந்த பல் பதிந்த ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் காண்பித்தபோது, அவர்கள் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஹேம்நாத் தப்பிக்க இந்த வழக்கை திசை திருப்ப தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். ஏற்கெனவே காவல் துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. அப்போது சித்ராவின் உடலை காவல் துறையினர் எரிக்கக் கூறி வலியுறுத்தினர். காவல் துறையினர் அப்போது தங்களை மிரட்டினர். தற்போது காவல் துறையினர் நியாயமான முறையில் மறுவிசாரணை நடத்த வேண்டும்.

சித்ரா பெயரில் உள்ள வீட்டை அபகரிக்க ஹேம்நாத் முயற்சித்து வருகிறார். கடந்த ஆட்சியில் உரிய முறையில் காவல் துறை விசாரணை நடத்தவில்லை. தற்போது இது குறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம்" என வேதனைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'எனக்கே பயமா இருக்கு; சுடிதார் அணிந்துகொண்டுதான் போயிருந்தேன்' - பைக் ரேஸிங்கில் இருக்கும் அஜித் ரசிகையிடம் அத்துமீறிய இளைஞர்!

Last Updated : May 14, 2022, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details